பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு – உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!
டெல்லி:பஞ்சாப்பில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்த ஆவணங்களை பாதுகாக்க வேண்டும் என்று பஞ்சாப்,ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் பஞ்சாப் வந்த பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார்.
அப்போது,பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் நின்றது.இதைத்தொடந்து,பிரதமரின் வருகை,திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும்,முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும்,பாதுகாப்பு குறைபாடு குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கிடையில்,உடனடியாக பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பிச்சென்றார்.விமான நிலையம் சென்ற பிரதமர், நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன்.உங்கள் முதல்வருக்கு அதற்காக நான் நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள் என பதிண்டா விமான நிலையத்தில் இருந்த பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகினது.இவ்வாறு,பிரதமர் சென்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து பஞ்சாப் அரசு மீது பாஜகவினர் கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.
ஆனால்,இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் கூறுகையில்: பிரதமரின் பாதுகாப்பில் எந்த வித பாதுகாப்பு குறைபாடு இல்லை என்றும்,பிரதமரிப் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்காக நாற்காலிகளை பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில்,700 பேர்தான் நிகழ்சிக்கு வந்திருந்தார்கள் எனவும்,இதன் காரணமாகவே சில காரணங்களை கூறி பாஜகவினர் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர் எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து,பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைத்தது பஞ்சாப் அரசு அமைத்தது.அதன்படி,பஞ்சாப் பெரோஸ்பூரில் 3 பேர் கொண்ட விசாரணை குழு இன்று ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில்,பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.அப்போது,மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங்,பிரதமரின் பாதுகாப்பு மீறல் வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையல்ல, மாறாக தேசிய பாதுகாப்பு பிரச்சினை.இது சிறப்புப் பாதுகாப்புக் குழுக்களின் கீழ் வரும்.இது தொடர்பாக முறையான விசாரணை வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து,பஞ்சாப் அரசு மூத்த வழக்கறிஞர் கூறுகையில்,சம்பவம் நடந்த அன்றே மாநில அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த உயர்மட்டக்குழுவானது பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து 3 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்பிக்கும் என்றும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட பின்னர்,பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்த ஆவணங்களை திரட்டி,பாதுகாக்க வேண்டும் என்று பஞ்சாப்,ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
PM Modi’s Security Lapse | Supreme Court directs the Registrar General of Punjab and Haryana High Court to secure and preserve the travel records of Prime Minister Narendra Modi during his visit to Punjab forthwith. pic.twitter.com/bKPn1U3c5l
— ANI (@ANI) January 7, 2022
மேலும்,பஞ்சாப்,ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு அனைத்து ஒத்துழைப்பையும்,தேவையான உதவிகளையும் பஞ்சாப் அரசு மற்றும் மத்திய,மாநில பாதுகாப்பு படைகள் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து,வழக்கை வருகின்ற திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதற்கிடையில்,இது தொடர்பான வழக்கில் பஞ்சாப் தலைமை செயலாளர் சத்தோபாத்யாயா உள்ளிட்ட 13 மூத்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு,மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழு முன்பு ஆஜராக விசாரணை குழுவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.