வெளிநாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்.! 3நாள் பயண ஹைலைட்ஸ்…
டெல்லி : ரஷ்யா, ஆஸ்திரியா என பிரதமர் மோடி தனது மூன்று நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு, டெல்லி வந்தடைந்தார். 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்கு முதன்முதலில் சென்றார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பல விவகாரம் குறித்து பேசினார்.
இதை அடுத்து, அங்கு இருந்து ஆஸ்திரியாவுக்கு சென்று அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆஸ்திரியவாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
பின்னர், அந்த பயணத்தை முடித்து கொண்டு டெல்லிக்கு மோடி புறப்பட்டு இன்று காலை டெல்லி வந்தடைந்தார். அங்கு அவரை மத்திய அரசு அதிகாரிகள் வரவேற்றனர், இந்த பயணத்தின் போது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாட்டு தலைவர்களை சந்தித்து, பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.
ரஷ்யாவில் மோடி
- ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். மாஸ்கோவின் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பரஸ்பரம் கைகுலுக்கி சந்தித்து கொண்டனர்.
- தொடர்ந்து, பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.பிரதமர் மோடி – புதின் சந்திப்பின் போது இருநாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
- ரஷ்யாநாட்டின் மிக உயரிய விருதான “செயிண்ட் ஆண்ட்ரூ” விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்தார் ரஷ்யா அதிபர் புதின். இதனை ஏற்று கொண்ட பிரதமர், “எனக்கு அளித்த விருது 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த விருது” என பெருமிதம் கொண்டார்.
- 2014ஆம் ஆண்டிலிருந்து ஒரு நாட்டின் உயரிய சிவிலியன் விருது அவருக்கு வழங்கப்படுவது இது 12வது முறையாகும். மேலும், உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் பேசிய பிரதமர், போர்க்களத்தில் தீர்வுகள் பிறக்காது என அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரியாவில் மோடி
- தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு வியன்னாவில் உள்ள அதிபர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. வந்தே மாதரம் இசைத்து அரசு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அதிபர் மாளிகையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- இதனை அடுத்து இந்தியா இந்த உலகத்திற்கு புத்தரை கொடுத்தது. யுத்தத்தை அல்ல என ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், இந்தியா எப்போதும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உலகிற்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
- வியன்னாவில் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுடன் சந்திப்பை நடத்திய பிரதமர் மோடி, தொழில் தொடங்குமாறும், கூட்டு முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
- இந்திரா காந்திக்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் அந்நாட்டிற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.