ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி .!
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதில் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, சுமார் ரூ.4500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மெஹ்சானா-பதிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயு குழாய் பிரதமரால் அர்ப்பணிக்கப்படுள்ளது. ஆண்டுக்கு 86 லட்சம் சிலிண்டர்களை விநியோகிக்கும் அபு சாலையில் உள்ள ஹெச்பிசிஎல்லின் எல்பிஜி ஆலையையும் பிரதமர் அர்ப்பணித்தார்.
ஐஓசிஎல், அஜ்மீர் பாட்டில் ஆலையில் கூடுதல் சேமிப்பகத்தையும் அவர் அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை 12 இல் தராஹ்-ஜலவர்-தீந்தர் பிரிவில் ரூ.1,480 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட 4-வழிச் சாலையை அர்ப்பணித்தார். இந்த திட்டம் கோட்டா மற்றும் ஜலவார் மாவட்டங்களில் இருந்து சுரங்கங்களின் விளைபொருட்களின் போக்குவரத்தை எளிதாக்க உதவும்.
மேலும், சவாய் மாதோபூரில் ரயில்வே மேம்பாலம் இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் திட்டமும் உள்ளது. இந்த திட்டம் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட உதவும். தொடர்ந்து, ரயில்வே திட்டங்களில் சித்தோர்கர் – நீமுச் ரயில் பாதை மற்றும் கோட்டா – சித்தோர்கர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டங்களும் அடங்கும்.
இத்திட்டங்கள் சுமார் ரூ.650 கோடிக்கும் அதிகமான செலவில் இத்திட்டங்கள் முடிக்கப்பட்டு, இப்பகுதியில் ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். ஸ்ரீநாத்ஜியின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கக்கூடிய நவீன ‘சுற்றுலா விளக்கம் மற்றும் கலாச்சார மையம்’ நாததுவாராவில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தையும் பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த திட்டங்களைத் தொடங்கிவைக்க ராஜஸ்தானுக்குச் சென்ற பிரதமர் மோடி, இதன்பிற்கு மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் செல்கிறார். அங்கு 19,000 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.