கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கேரளாவிற்கு இரண்டு நாள் பயணமாக வருகை புரிந்த பிரதமர் மோடி இன்று ரூ.3,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கிறார். அதில் முதற்கட்டமாக, மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார். திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையேயான இந்த ரயிலை மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த ரயில் திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையேயான 586 கிமீ தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் நாட்டில் முதல் முறையாக கொச்சியில் நீர்வழி மெட்ரோ சேவை தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த திட்டம் கேரளாவின் துறைமுக நகரான கொச்சியில் 2021 பிப்ரவரியில் ரூ.1,137 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டது. முன்னதாக, இது அம்மாநிலத்தின் கனவுத் திட்டம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். தென் மாநிலத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு உற்சாகமான காலம் வரவுள்ளதாக முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.