செங்கோட்டையை அரசியல் மேடையாக மாற்றிய பிரதமர் மோடி.! எதிர்க்கட்சிகள் விமர்சனம்.!
நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில், 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலகப் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இந்தியா இருந்தது. இன்று 140 கோடி இந்தியர்களின் முயற்சியால் 5வது இடத்திற்கு வந்துவிட்டோம்.
நாட்டின் ஊழலை தடுத்து வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளோம். வரும் 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய ஓய்வின்றி உழைத்து வருகிறோம் என்றும் எங்களுக்கு வாக்களித்தால் சீர்திருத்தத்திற்காக உழைப்போம். அதன்படி, கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் வலுவான மற்றும் பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுத்திருந்தனர். இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக விளங்கிய ஊழல் என்ற அரக்கனை அழித்தோம். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்காமல் உங்களுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வந்து உள்ளோம்.
இதனால் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று அடுத்த ஆண்டு மீண்டும் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் சுதந்திர தின விழாவில் உரையாற்றுவேன் என பிரதமர் மோடி நேற்றைய சுதந்திர தின விழாவில் கூறினார்.
பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். செங்கோட்டை மேடையை பிரதமர் மோடி அரசியல் மேடை போல மாற்றிவிட்டார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
மல்லிகார்ஜுன கார்கே :
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், 2024-ம் ஆண்டில் மீண்டும் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவேன் என இப்போதே பிரதமர் மோடி கூறியிருப்பது அவரது ஆணவத்தை காட்டுகிறது என விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி அடுத்த ஆண்டும் தேசிய கொடியை ஏற்றுவார், ஆனால் அதை அவரது வீட்டில் ஏற்றுவார் என விமர்சித்தார். ஒவ்வொரு நபரும் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மீண்டும் வருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் வெற்றி பெற வைப்பது, தோல்வி அடைய செய்வது மக்கள் கையில் உள்ளது. சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல. அவர் எப்படி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் எனவும் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
மம்தா பேனர்ஜி :
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதந்திர தினத்துக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது பேசுகையில் அவர் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமரின் உரை இதுதான் கடைசியாக இருக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா முழுவதும் பாஜகவை இந்தியா கூட்டணி வீழ்த்தும். பிரதமர் ஆசை எனக்கில்லை, பாஜக வீழ்த்தப்பட வேண்டும். பாஜக ரபேல் போன்ற விஷயங்களில் ஊழலில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு மீது பல்வேறு ஊழல் புகார் உள்ளது என்று மம்தா பேனர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் :
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில், நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் போன்ற பெரிய மனிதர்களுக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பங்களிப்புகளை தேசம் ஒருபோதும் மறக்க முடியாது என கூறினார்.
மேலும், பல தசாப்தங்களாக தனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாவும், அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்ற முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பாஜக கடுமையான வீழ்ச்சியடையும் என குறிப்பிட்டு பேசினார்.