பிரதமர் மோடி பதிலுரை.. எதிர்கட்சிகள் கடும் அமளி..! சபாநாயகர் இருக்கை முற்றுகை….
டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
18வது மக்களவை கூட்டத்தொடர் முதல் கூட்டம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று மற்றும் இன்று மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர் . நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியதை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி உரை ஆற்றுகிறார்.
அவர் பேசுகையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலளிக்க நான் இங்கு வந்துள்ளேன். நமது குடியரசுத் தலைவர் அவரது உரையில் நமது நாட்டை பற்றியும் அதன் உறுதி பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் முக்கியமான சில பிரச்சினைகளை அதில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறினார்.
மேலும் பேசுகையில், நேற்றும் இன்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் உரை குறித்த அவர்களது கருத்துக்களை கூறியுள்ளனர். குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக முதன்முறையாக வந்தவர்களும் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளார். அவர்கள் பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றினர். அவர்களின் நடத்தை அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரைப் போல இருந்தது. அவர்களின் கருத்துக்களால் இந்த விவாதத்தை மிகவும் மதிப்புமிக்கதாக மாறியது.
உலகின் மிகப்பெரிய தேர்தல் விழாவில், பொதுமக்கள் எங்களை (பாஜக) தேர்ந்தெடுத்துள்ளனர், சிலரது (எதிர்க்கட்சிகள்) வேதனையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து பொய்களை அவர்கள் பரப்பிய போதிலும், பெரும் தோல்வியை மட்டுமே அவர்கள் சந்தித்தனர்.
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக நாங்கள் உழைத்துள்ளோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் ஊழல் செய்திகளே அதிகம் இடம்பெற்று வந்துள்ளன என்று பிரதமர் பதிலுரை ஆற்றி கொண்டு இருக்கும்போது எதிர்க்கட்சிகள் , ‘மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும்’ என கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுப்பட்டனர். இருந்தும் பிரதமர் மோடி தனது பதிலுரையை தொடர்ந்து ஆற்றி வந்தார்.
எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால், ” பிரதமர் பேசும் போது கண்ணியத்துடன் உறுப்பினர்கள் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்கட்சியினரை கேட்டுக்கொண்டார். இருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால் மக்களவையில் பெரும் சலசலப்பு நிலவி வருகிறது.