பிரதமர் மோடியை சந்தித்தார் குமாரசாமி..!
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனையடுத்து ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது. அதன்படி இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்–மந்திரியாக குமாரசாமியும் துணைமுதல்–மந்திரியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரும் பதவி ஏற்று உள்ளனர். மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 22, ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 12 என்ற அளவில் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும், துணை சபாநாயகர் பதவி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் என்று முடிவு செய்யப்பட்டு காங்கிரசை சேர்ந்த ரமேஷ்குமார் சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். முதல்–மந்திரி மற்றும் துணை முதல்–மந்திரி மட்டுமே பதவி ஏற்றுள்ள நிலையில் மற்ற மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை.
இதற்கிடையே குமாரசாமி இன்று பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச இருந்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று வெளிநாடு புறப்பட்டு சென்றுவிட்டார். அதனால் குமாரசாமி–ராகுல் காந்தி சந்திப்பு ரத்தாகியது. இந்நிலையில் புதுடெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை குமாரசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது