மணிப்பூரை விட இஸ்ரேல் மீது பிரதமர் அதிக கவனம் கொண்டுள்ளார்.! ராகுல்காந்தி விமர்சனம்.!
அடுத்த மாதம் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மிசோராம் மாநிலமும் ஒன்று. 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளை பிரதான கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மிசோரம் சென்றுள்ளார். இன்று (திங்கள்கிழமை) மிசோராம் தலைநகர் ஐஸ்வாலில் ஆளுநர் மாளிகை நோக்கி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டார்.
மிசோரம் சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி..!
இந்த பேரணியின் போது மக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய அவர்கள் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மணிப்பூர் மாநிலம் பாஜகவால் அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது மணிப்பூர் ஒரு மாநிலம் அல்ல. இரண்டு மாநிலங்களாக பிரிந்து கிடக்கிறது. அங்குள்ள மக்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர், குழந்தைகள் கொல்லப்பட்டனர், இவ்வளவு நடந்தும் அங்கு பிரதமர் மோடி பயணம் செய்யவில்லை. இது வெட்கப்பட வேண்டிய ஒன்று என்றும் கடுமையாக விமர்சித்தார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.
அண்மையில் காங்கிரஸ் கட்சி மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலுக்காக 39 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.