“ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர்” தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர்!

Default Image

கர்நாடக மாநிலம் துமகுருவில் எச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

கர்நாடகாவின் துமகுருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சமீபத்திய ஹெலிகாப்டர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டரையும் பிரதமர் வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உடனிருந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை பிரத்யேக கிரீன்ஃபீல்ட் தொழிற்சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டிலேயே ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க உதவும் என்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது. ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையில் இலகுரக ஹெலிகாப்டர்கள், லைட் காம்பாட் ஹெலிகாப்டர்கள், இந்தியன் மல்டிரோல் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதுபோன்று அனைத்து ரக ஹெலிகாப்டர்களையும் பழுதுபார்க்கவும், மேம்படுத்தவும் வசதிகள் உள்ளன.

அடுத்த 20 ஆண்டுகளில், 3 முதல் 15 டன் எடையுள்ள 1,000 ஹெலிகாப்டர்களை தயாரிக்க ஹெச்ஏஎல் திட்டமிட்டுள்ளது. “ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர்” தொழிற்சாலை திறப்பு  விழாவில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகம் எப்போதுமே புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் பூமியாக இருந்து வருகிறது. மாநிலத்தில் ஆளில்லா விமானங்கள் மற்றும் தேஜாஸ் விமானங்களின் தயாரிப்பு ஏற்கனவே நடைபெற்று வருகிறது.

துப்பாக்கிகள், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், சுயசார்பு நிலையில் இருக்கிறோம். துமகுரு பகுதியைச் சுற்றியுள்ள தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும் தொழில் நகரங்களுக்கிடையேயான இணைப்பில் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

தொழில்துறை பகுதிகளுக்கு இடையே இணைப்பை உருவாக்குவது முக்கியமானது. பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் மும்பை இடையேயான தொடர்பை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் மேலும் பல திட்டங்கள் ஏற்கனவே நடந்து வருகின்றன. அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்குவிக்கும்.

எச்ஏஎல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு, எங்கள் அரசுக்கு எதிராக பல தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. நாடாளுமன்றத்தின் பல வேலை நேரம் அதற்காக வீணடிக்கப்பட்டது. எச்ஏஎல்-ன் ஹெலிகாப்டர் தொழிற்சாலையும் அதன் உயரும் சக்தியும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு இது ஒரு பதில். எச்ஏஎல் பாதுகாப்பில் தன்னம்பிக்கையை அதிகரித்து வருகிறது, மேலும் இது இந்தியாவின் பாதுகாப்பின் எதிர்காலம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்