பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி.? குடியரசு தலைவர் உரையில் சலசலப்பு.!
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் கடந்த திங்களன்று தொடங்கி , புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு, பின்னர் சபாநாயகர் தேர்தல் என நிறைவு பெற்று இன்று குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடங்கியது
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசுகையில், 3வது முறையாக பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி பற்றி பல்வேறு பாராட்டுக்களை தெரிவித்தார்
அப்போது குறிப்பிடுகையில், மக்கள் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் தான் 6 தசாப்தங்களுக்கு பிறகு ஒரு கட்சி (பாஜக) பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சியை அமைத்துள்ளது என குறிப்பிட்டார். மேலும், இந்த நிலையான அரசாங்கத்தால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்றும்,18-வது மக்களவை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மக்களவை என குறிப்பிட்டார்.
பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது என திரௌபதி முர்மு கூறுகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தில் சிறிது சலசலப்பு நிலவியது.
ஏனென்றால் , 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் தான் பாஜக பெரும்பான்மையுடன் மற்ற கட்சிகளின் ஆதரவு இன்றி ஆட்சியை கைப்பற்றி இருந்தது. ஆனால் நடந்து முடிந்த 2024 தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பிடித்தது. இதனால் NDA கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் தற்போது பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.