குடியரசு தலைவர் தேர்தல் : விறு விறு வாக்குப்பதிவு… பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் முதல்… ஹர்பஜன் சிங் வரை….
பிரதமர் மோடி, மன்மோகன் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் என பலரும் தங்கள் வாக்கினை செலுத்தினர்.
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இம்மாதம் (ஜூலை) 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று இந்தியாவின் புதிய குடியரசு தலைவர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில், இந்தியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ( மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்) பிரதமர், மாநில முதல்வர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்றத்தில் தனது வாக்கினை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீல் சேரில் வந்து வாக்கினை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தனது வாக்கினை செலுத்தினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத் என பல தலைவர்கள் தங்கள் வாக்கினை செலுத்தினர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான டெல்லி மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங், கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினர் கௌதம் கம்பீர் ஆகியோரும் தவறாமல் தங்கள் வாக்கினை செலுத்தினர்.