#BREAKING: கோவா முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்!
கோவா மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார் பிரமோத் சாவந்த்.
கோவா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆனால், ஆட்சி அமைக்க ஒரு இடம் குறைவாக இருந்த நிலையில், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்தது.
கோவா சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சவந்த் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், கோவா முதலமைச்சராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்று கொண்டார். பனாஜி அருகே டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, முன்னிலையில் பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார்.
கோவா முதல்வர் பிரமோத் சவந்த்துக்கு அம்மாநில ஆளுநர் பிஎஸ் ஸ்ரீதரன்பிள்ளை பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் விஸ்வஜித் ரானே, மவுவின் கோடின்ஹோ, ரவி நாயக், நிலேஷ் கப்ரால், சுபாஷ் ஷிரோத்கர், ரோஹன் கவுண்டே, கோவிந்த் கவுடே, அடானாசியோ மான்செரேட் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.