“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!
லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதல்வரான பாவான் கல்யாணும், பிரகாஷ் ராஜும் மாறி மாறி தங்களது கருத்துக்களைத் பதிவு செய்து வருகின்றனர்.
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், ஆந்திர துணை முதல்வரான பவான் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில், “திருப்பதி பாலாஜி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கண்டறியப்பட்டு இருப்பதை நினைத்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆகியுள்ளேன். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சனாதன தர்மத்தை எந்த வடிவதத்திலும் இழிவுப்படுத்தக்கூடாது.
இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் இதுதொடர்பாக பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். தற்போது நடந்த இந்த விவகாரம் என்பது கோவில்கள் மற்றும் பிற தர்மத்தின் நடைமுறையையும், நம்பிக்கையையும் இழிவுப்படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது”, என பவான் கல்யாண் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ், “அன்புள்ள பவன் கல்யாண், இந்த சம்பவம் நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில் நடந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் அதை விட்டுவிட்டு நீங்கள் ஏன் தேவையற்ற அச்சத்தை பரப்புகிறீர்கள்? இந்த பிரச்னையை தேசிய அளவில் ஊதி பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே நாட்டில் போதுமான வகுப்புவாத பதற்றங்கள் உள்ளன. (மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி)”, என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு மீண்டும் பவன் கல்யாண் பதிலடி கொடுத்துள்ளார். லட்டு தொடர்பான விவகாரத்தில் 11 நாள் விரதம் கடைப்பிடித்து வரும் துணை முதல்வரான பவன் கல்யாண் இன்று விஜயவாடாவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.
அங்கு பேசிய அவர் நடிகர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக பவன் கல்யாண் பேசியபோது, “லட்டு விவகாரம் பற்றி நான் ஏன் பேசக்கூடாது? என் வீடு மீது தாக்குதல் நடத்தப்படும் போது நான் பேச வேண்டும். பிரகாஷ் ராஜ் நீங்கள் பாடம் கற்க வேண்டும். நான் உங்களை மதிக்கிறேன்.
இது பிரகாஷ் ராஜ்க்கு மட்டுமில்லை மதசார்பின்மை என்ற பெயரில் குறிப்பிட்ட வழியில் செல்லும் ஒவ்வொருக்கும் தான். நான் மீண்டும் சொல்கிறேன். நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களின் உணர்வுகளை கேலி செய்ய வேண்டாம். இந்த சம்பவம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்.
ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாத. இது ஆழமான வலியை தந்துள்ளது. சனாதன தர்மத்தை பற்றி பேசுவதற்கு முன்பு 100 முறை யோசித்து பேசுங்கள்’‘, என எச்சரித்து அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பவான் கல்யாண் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில், நான் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என விளக்கமளித்து ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடீயோவில், “நான் சொன்னதை வேறு மாதிரியாக புரிந்து கொண்டு நீங்கள் பேசியிருப்பது எனக்கு ஆச்சரியமாகவுள்ளது, நான் ஷூட்டிங் காரணமாக தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன், உங்கள் கேள்விகளுக்கு நான் வந்து பதிலளிக்கிறேன், அதற்குள் நான் போட்ட டீவீட்டை பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும்”, என்று பிரகாஷ் ராஜ் கூறியிருந்தார்.
Dear @PawanKalyan garu..i saw your press meet.. what i have said and what you have misinterpreted is surprising.. im shooting abroad. Will come back to reply your questions.. meanwhile i would appreciate if you can go through my tweet earlier and understand #justasking pic.twitter.com/zP3Z5EfqDa
— Prakash Raj (@prakashraaj) September 24, 2024