தங்கக்கடத்தல் வழக்கு: சிவசங்கரன் முன்ஜாமீன் மனுவின் விசாரணை ஒத்திவைப்பு!
தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனின் முன்ஜாமீன் மனுவின் விசாரணையை கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், சுங்கத்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அக்.23-ம் தேதி வரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன், முன்ஜாமீன் கோரி கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்தநிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அவரை வரும் 28-ம் தேதி வரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது.