நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி!

நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி 8 வயதாகும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஹால் டிக்கெட் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மில்லியன் கணக்கான மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற, வரும் 13 -ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுகளை ஒத்திவைக்கமாறு தெரிவித்துள்ளார்.
Here is the copy of the same letter submitted to the President @rashtrapatibhvn . ???????? pic.twitter.com/lypsKXZt9x
— Licypriya Kangujam (@LicypriyaK) September 2, 2020
நீட் மட்டுமின்றி, ஜே.இ.இ. மெயின், ஜே.இ.இ அட்வான்ஸ், மூன்றாம் ஆண்டு பல்கலைக்கழக தேர்வுகள், சி.பி.எஸ்.இ கம்பார்ட்மென்டல் தேர்வுகள், என்.டி.ஏ, டியூட் மற்றும் பிற தேர்வுகளை தாமதமின்றி ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உலகளவில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டுமின்றி, சுமார் 14 மாவட்டங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன், இந்தியாவில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க துணை நிற்பதாக காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிறுமி கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.