ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!
ஜம்மு காஷ்மீரில் இன்று 24 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.
காஷ்மீர் : கடந்த 2019இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அது முன்னர் வரையில் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 6 ஆண்டுகள் பதவிக்காலமானது, பின்னர் வழக்கமான 5 ஆண்டுகால ஆட்சி முறையாக மாறியது. இந்த நடைமுறைக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் கடைசியாக 2014இல் தேர்தல் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த முதற்கட்ட வாக்குபதிவில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 7 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் 3276 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
சுமார் 23 லட்சம் வாக்காளர்கள் இந்த முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தல் பணியில் 14 ஆயிரம் தேர்தல் பணியாளர்கள் பணியர்த்தப்பட்டுள்ளனர். காஷ்மீர் பகுதி தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகள் அதிகம் இருப்பதால் பாதுகாப்பு மற்ற மாநிலங்களை காட்டிலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும். அடுத்த கட்ட தேர்தல் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி 26 தொகுதிகளில் நடைபெறும். மீதம் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வரும் அக்டோபர் 8ஆம் தேதி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.