கர்நாடகாவில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
கர்நாடகா மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவு.
கர்நாடகாவில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளைக் கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதன்பின், முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றனர்.
இவர்களை தொடர்ந்து மொத்தம் கர்நாடக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டது. இதில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு நிதித்துறையும், கேபினட் விவாகாரத்துறையும்துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்வளத்துறை, பெங்களூரு நகர வளர்ச்சித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சமயத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக கர்நாடகாவில் காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கர்நாடக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய தயானந்தா பெங்களூரு காவல்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.
இதுபோல் பெங்களூரு காவல்துறை ஆணையராக பணியாற்றிய பிரதாப் ரெட்டி உள் பாதுகாப்பு டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பெங்களூரு போக்குவரத்துறை ஆணையராக பணியாற்றிய டாக்டர் எம்.சலீம் குற்றவியல் கூடுதல் டிஜிபியாகவும், ஐபிஎஸ் அதிகாரி சரத் சந்திரா சிஐடியில் இருந்து உளவுத்துறை ஏடிஜிபியாக மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.