ஆந்திர முதல்வரை விமர்சித்த போலீஸ் அதிகாரி கைது..!
ஆந்திர முதல்வரை விமர்சித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து வாகனத்தை ஒட்டிய ஆயுதப்படை போலீஸ் கான்ஸ்டபிள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சனம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என்டிஆர் மாவட்டத்தில் உள்ள கவுரவரம் கிராமத்திற்கு அருகிலுள்ள பெட்ரோல் பம்ப் ஒன்றில் வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
அப்பொழுது அந்த கிராம பகுதியில் உள்ள ஒரு நபருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அந்தநேரம் தன்னேரு வெங்கடேஷ்வர்லு என்ற ஆயுதப்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள், முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையில் விமர்ச்சித்துள்ளார். முதல்வர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், சமூகங்களுக்கு இடையே வெறுப்பு மற்றும் விரோதத்தை தூண்டும் வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் சிலக்கல்லு போலீசார், வெங்கடேஷ்வர்லு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜக்கையாப்பேட்டை கூடுதல் நீதிமன்றம், கான்ஸ்டபிளை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்குமாறு தீர்ப்பளித்ததையடுத்து, சில்லக்கல்லு போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து விஜயவாடா நகர காவல் ஆணையர் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் பொறுப்பான பணியில் இருந்தும் சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.