டெல்லி நோக்கி முன்னேறும் விவசாயிகள்.., கண்ணீர் புகை குண்டுகள் வீசி தடுத்து நிறுத்தும் போலீசார்!
பயிர்களுக்கு ஆதார விலை கோரிக்கை முன்னிறுத்தி பஞ்சாபில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகளை ஹரியானா மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
டெல்லி : பயிர்களுக்கு ஆதார விலை (MSP) கோரிக்கையை முன்னிறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் 101 பேர் அடங்கிய குழுவினர் இன்று தலைநகர் டெல்லி நோக்கி பேரணியாக புறப்படுவதாக முன்னர் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று அவர்கள் ஹரியானா – டெல்லி மாநில எல்லையான ஷம்பு பகுதிக்கு வந்தனர்.
அவர்களை டெல்லி நோக்கி செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் முன்னேறுவதை தடுக்க தடுப்புகள் அமைத்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தடுத்தி நிறுத்தி வருகின்றனர். கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொள்ள முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு விவசாயிகள் பேரணியை தொடர்ந்ததால் ஷம்பு எல்லையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஹரியானா போலீசார் தரப்பு கூறுகையில், போராடுபவர்கள் விவசாயிகளா என்பதை கண்டறிய முடியவில்லை என்றும், அவர்களின் அடையாள அட்டைகளை காண்பிக்க மறுக்கின்றனர் என்றும், இதனால் தான் அவர்களை உள்ளே விட மறுக்கிறோம் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் போராட்டம் நடத்தும் விவசாயிகள் தரப்பில் நாங்கள் ஏற்கனவே எங்கள் 101 பேர் அடங்கிய குழு பட்டியலை அழித்துவிட்டோம். ஆனால் அவர்கள் பழைய கோப்புகளை கொண்டு சோதனை செய்து வருகிறார்கள். எங்களிடம் விவசாயிகள் அடையாள அட்டை இருக்கிறது. எஙக்ளை டெல்லிக்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர் எனக் கூறியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல இந்த வருட தொடக்கத்தில் பிப்ரவரி மாதமும் விவசாயிகள் பேரணி டெல்லி மாநில எல்லைக்குள் செல்ல விடாமல் ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.