கைது செய்யப்படுகிறாரா..? கெஜ்ரிவால் இல்லம் முன்பு போலீஸ் குவிப்பு..!
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை அமலாக்கத்துறை முடிவு செய்தது.
அதன்படி, கடந்த நவம்பர் 2ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால் தேர்தலை காரணம் காட்டி ஆஜராகவில்லை. இதையடுத்து, 2 வது முறையாக கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட உள்ளதால் ஆஜராக முடியவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், 3-வது முறையாக நேற்று அமலாக்கத்துறை மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜராகவில்லை. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான ஆதிஷி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என நேற்று கூறிய நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.