இறந்த நபரின் மொபைல் போனை திருடிய காவலர் பணியிடை நீக்கம் …!
இறந்த நபரின் மொபைல் போனை திருடிய கேரளாவை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கொல்லம், சாத்தனூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் தான் ஜோதி சுதாகர். திருவனந்தபுரம் மாவட்டம் பெருமத்தூரைச் சேர்ந்த அருண் ஜெர்ரி எனும் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரயில் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.
அருணின் உறவினர்கள் அவரது உடலை பரிசோதிக்க வந்தபோது அவரது மொபைல் போன் உள்ளிட்ட பல விஷயங்கள் காணவில்லை எனவும், அது ரயிலின் அடியில் சிக்கி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மற்ற ஆவணங்கள் அனைத்தும் கிடைத்திருந்தாலும், அவரது மொபைல் போன் கிடைக்காததால் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை விசாரித்த கேரள காவல்துறையின் சைபர் பிரிவு, செல்போன் செயந்தூர் பகுதியில் செயல்பாட்டில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரித்த பொழுது இந்த போனை ஜோதி சுதாகர் எனும் காவல் அதிகாரி பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அருண் விபத்தில் உயிரிழந்த சமயத்தில் மங்களாபுரம் எஸ்.ஐயாக இருந்த ஜோதி சுதாகர் தலைமையில் தான் உடல் விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையின் பொழுது ஜோதி தொலைபேசியை திருடி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது ஜோதி சுதாகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.