நடிகர் தீப் சிந்து மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு..!
டெல்லி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில், தீப் சிந்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு.
தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பலரும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினமான 26-ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பஞ்சாப் நடிகரான தீப் சிந்து அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆனால் இவர்களை விவசாய சங்கத்தினர் தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவில்லை. தீப் சிந்து மற்றும் அவரது ஆதரவலர்கள் பேரணியை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி கொடுத்த வழிகளில் செல்லாமல், காவல்துறையினரின் தடுப்புகளை மீறி செங்கோட்டை வரை சென்றுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த இவர்கள், சீக்கிய மத கொடியை ஏற்றியுள்ளனர். இதனையடுத்து டெல்லி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில், தீப் சிந்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் அரசு ஊழியரை தாக்கியது போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.