அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீஸ் தீவிரம்.. பஞ்சாபில் இணையதள சேவைகள் முடக்கம்!
பஞ்சாபில் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்ததால், இணைய சேவைகள் முடக்கம்.
காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் டி’யின் தலைவரும், தீவிர சீக்கிய மத போதகருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை பஞ்சாப் காவல்துறை தொடங்கிய பின்னர், பஞ்சாபின் பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை மொபைல் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளத்தில் வீடியோ:
அதாவது, வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள், மோகா மாவட்டத்தில் அம்ரித்பால் சிங்-ஐ, பஞ்சாப் காவல்துறை வாகனங்கள் துரத்துவது போன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், அம்ரித்பால் சிங் ஒரு வாகனத்தில் அமர்த்திருப்பதாகவும், அவரது உதவியாளர் ஒருவர், ‘பாய் சாப்’ (அமிர்தபால்)-ஐப் பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
போலீசாருடன் மோதல்:
ஒரு அறிக்கையின்படி, அம்ரித்பால் சிங்கின் 6 கூட்டாளிகள் காவல்துறையின் அடக்குமுறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிங்கின் ஆதரவாளர்களின் வீடுகளும் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. கடந்த மாதம், அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அவர்களில் சிலர் வாள் மற்றும் துப்பாக்கிகளை காட்டி, தடுப்புகளை உடைத்து, அமிர்தசரஸ் நகரின் புறநகரில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அம்ரித்பாலின் உதவியாளர் ஒருவரை விடுவிப்பதற்காக போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் போலீசார் தீவிரம்:
துபாயில் இருந்து திரும்பிய அம்ரித்பால் சிங் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாலை விபத்தில் இறந்த நடிகரும், ஆர்வலருமான தீப் சித்துவால் நிறுவப்பட்ட ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் ஆவார். இந்த சமயத்தில், காலிஸ்தான் இயக்க ஆதரவாளர் அம்ரித்பால் சிங்-ஐ கைது செய்ய பஞ்சாப் போலீசார் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், அம்ரித்பால் சிங் கைது தொடர்பாக காவல்துறையின் நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
இணையதள சேவை முடக்கம்:
இந்த நிலையில், அம்ரித்பால் சிங் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாபில் பல்வேறு மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள், அனைத்து எஸ்எம்எஸ் சேவைகள் (வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் தவிர) மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் அனைத்து டாங்கிள் சேவைகள், குரல் அழைப்பு தவிர, இன்று முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி வரை நிறுத்தப்படும் என உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.