விஷவாயு: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் – ஜெகன் மோகன் ரெட்டி
விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் வெண்டிலேட்டர் பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பின்னர் அரசு அதிகாரிகளை விசாகப்பட்டினத்தில் தங்கியிருந்து அங்குள்ள நிலைமையை கண்காணிக்க உத்தரவிட்டுளேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆந்திர மாநில அரசு முழுமையான உதவியை செய்யும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
இதனிடையே விஷவாயு பாதிப்பு ஏற்பட்ட விசாகபட்டினத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டு, கிங்சார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரிடம் நலம் விசாரித்து, இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். விஷவாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.