ஒரு கோடி பேருக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம்.! பிரதமர் மோடி அறிவிப்பு.!
2024-2025-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை பிப்.1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி தொகுப்பை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் ஒரு வீட்டுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் எனவும் நிதியமைச்சர் அறிவித்தார்.
அதாவது, ஒரு கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் கிடைக்கும். இதன்மூலம் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மொட்டைமாடியில் சோலார் பேனல் அமைக்கும் திட்டம், பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா (PM Surya Ghar: Muft Bijli Yojana):
இதுதொடர்பான பிரதமர் பதிவில், பிரதமர் சூர்யா கர் : முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் மூலம், நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டுக் கூரைகளில் 1 கோடிக்கும் அதிகமான மேற்கூரை சோலார் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் நல்வாழ்வுக்காக ரூ.75,000 கோடி செலவில், ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் 1 கோடி வீடுகளுக்கு ஒளியூட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கப்படும் கணிசமான மானியங்கள் முதல் அதிக சலுகை வங்கிக் கடன்கள் வரை, மக்கள் மீது எந்த செலவுச் சுமையும் இல்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்யும். அனைத்து பங்குதாரர்களும் தேசிய ஆன்லைன் போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படுவார்கள், இது மேலும் வசதியாக இருக்கும்.
பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்!
இந்த திட்டத்தை அடிமட்டத்தில் பிரபலப்படுத்த, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் தங்கள் அதிகார வரம்புகளுக்கு உட்பட பகுதிகளில் இதனை ஊக்குவிக்க வேண்டும். மேற்கூரை சோலார் திட்டத்தை பிரபலப்படுத்தும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் கவுரவிக்கப்படும்.
அதே நேரத்தில், இந்த திட்டம் அதிக வருமானம், குறைந்த மின் கட்டணங்கள் மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அனைத்து குடியிருப்பு நுகர்வோர்கள், குறிப்பாக இளைஞர்கள், இந்த திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த சோலாரிசேஷன் மூலம் ரூ.15,000 வரை சேமிக்கப்படும். இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் கணிசமான பகுதியை நிலக்கரியில் இயங்கும் மின்சாரம் மூலம் பூர்த்தி செய்கிறது, மேலும் இந்த சோலார் கூரைத் திட்டம் வழக்கமான சக்தி ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான ஒரு வழியாக கருதப்படுகிறது.
மேலும், 2021இல் நடைபெற்ற COP26 இல், இந்தியா ஒரு லட்சியமான உறுதிமொழி ஏற்கப்பட்டது. 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற மின்சாரத் திறனை எட்டுவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தேவைகளில் பாதியை உருவாக்குவது, 2030க்குள் 1 பில்லியன் டன்கள் உமிழ்வை குறைப்பது ஆகியவை அடங்கும் எனவும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.