பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.! மேகாலயா அரசு உத்தரவு.!
மேகாலயா சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பிப்ரவரி 24 அன்று பிரதமர் மோடி கலந்துக்கொள்ள இருந்த பிரச்சார கூட்டத்திற்கு அரங்கு மறுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் அதே நாள் தான் மேகாலயா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேசிய மக்கள் கட்சி ஆட்சியில் உள்ளது. கான்ராட் சங்மா முதல்வராக பதவியில் இருக்கிறார்.
பிரதமர் பிரச்சாரம் : அங்கு வரும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று பாஜகவை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய துரா பகுதியில் பி.ஏ.சங்மா அரங்கில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த பிரச்சார கூட்டத்திற்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
அரசு மறுப்பு : பி.ஏ.சங்மா அரங்கில் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டி பிரசார கூட்டத்துக்கு மேகாலயா அரசு அனுமதி மறுத்தது. இதனை அடுத்து, மேகாலயா பாஜக நிர்வாகி கூறுகையில், பிப்ரவரி 24 பிரதமர் மோடி பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. பிரச்சார கூட்டம் வேறு இடத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.