பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணம்.., மத்திய அரசு வெளியிட்ட பிரத்யேக தகவல்கள்…
பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் சிங்கப்பூர் பயணத்தின் முக்கிய சாராம்சங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயனாக வரும் செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார். பிரதமரின் இந்த பயணம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் ஜெய்தீப் மசூம்தார் பல்வேறு முக்கிய தகவல்களை செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார் என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “செப்டம்பர் 4ஆம் தேதி பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு செல்கிறர். அங்கு இந்தியாவுக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை பிரதமர் மேற்கொள்கிறார். இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மேற்கொள்ளும் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். தெற்காசிய நாடுகளில் இந்தியாவுடன் அதிகளவு வர்த்தகம் மேற்கொள்ளும் நாடாக சிங்கப்பூர் உள்ளது. கடந்த நிதியாண்டு தரவுகளின்படி, இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் தான் முன்னிலையில் உள்ளது.
இந்தியா சிங்கப்பூர் இடையேயான வர்த்தகம் என்பது மிகப்பெரியது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் இரு நாடுகளுக்கு இடையே 160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் நடைபெற்று உள்ளது. இந்த பயணத்தில் பன்னாட்டு தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அதில் பிரபல தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் (C.E.O) உள்ளனர். பிரதமர் மோடியின் இந்த பயணத்தால் இந்திய தொழில்துறை வளர்ச்சி அடையும்.
3வது முறையாக பிரதமராக பதவியேற்றப் பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூர் புதிய பிரதமரான லாரன்ஸ் வோங் பிரதமர் மோடியை வரவேற்பதில் ஆர்வமாக இருக்கிறார். இந்தியா – சிங்கப்பூர் இடையேயான உறவை வலுப்படுத்துவது என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்தியா சிங்கப்பூரின் வர்த்தக உறவு என்பது நிலையாக வளர்ந்து வருகிறது. நாங்கள் இருநாட்டு கூட்டுறவு வர்த்தகம் மற்றும் கல்வி ஆகிய உறவுகள் நல்ல முறையில் உள்ளது. அடுத்த ஆண்டு 2025இல் இந்தியா – சிங்கப்பூர் இடையான உறவானது 60வது ஆண்டை நிறைவு செய்யும்.
சமீபத்தில் முடிவடைந்த இந்தியா மற்றும் சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசை மாநாட்டின் போது, பல்வேறு துறைகளில் வளர்ச்சி குறித்து இருதரப்பு அமைச்சர்களுக்கும் தங்கள் தனித்துவமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். டிஜிட்டல்மயமாக்கல், சுகாதாரம், உள்நாட்டு உற்பத்தி மற்றும் இரு நாட்டு நட்புறவு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. பிரதமரின் சிங்கப்பூர் பயணத்தின் போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்புள்ளது.” என்று பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் ஜெய்தீப் மசூம்தார் தெரிவித்துள்ளார்.