மகளிருக்காக ரூ.2500 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக் குழு திட்டம்.! பிரதமர் மோடி அறிவிப்பு.!
டெல்லி : ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் லக்பதி திதி சம்மேளனம் (மகளிர் சுயஉதவிக் குழு) திட்டத்தை நாளை மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுடனான தனது 3 நாள் அரசுப் பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்ப உள்ளார். நாளை ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்.
இதில், மகாராஷ்டிரா நிகழ்வு பற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நாளை (ஆகஸ்ட் 25) லக்பதி திதி சம்மேளனத்தில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் போது, 11 லட்சம் மகளிருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பெண்கள் அதிகாரம் பெறுவதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுயஉதவி குழுக்களில் உறுப்பினராக உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெறும் வகையில் 2500 கோடி ரூபாய் சுழற்சி நிதியுதவி வழங்கும் நிகழ்வு தொடங்கப்படும்.” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வு குறித்து அரசு குறிப்பேட்டில் குறிப்பிடுகையில், நாடுமுழுக்க உள்ள சுமார் 4.3 லட்சம் சுயஉதவி குழுக்களில் (SHG) சுமார் 48 லட்சம் உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், 2,500 கோடி ரூபாய் சுழலும் நிதியை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மேலும், ரூ.5,000 கோடி வங்கிக் கடனையும் பிரதமர் நாளை வழங்க உள்ளார். இதன் மூலம் 2.35 லட்சம் சுய உதவிக்குழுக்களில் 25.8 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பயனடைவார்கள்.
லக்பதி திதி யோஜனா தொடங்கப்பட்டதிலிருந்து, ஒரு கோடி பெண்கள் ஏற்கனவே லட்சாதிபதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இதனை அடுத்து 3 கோடி லட்சாதிபதி மகளீரை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என குறிப்பீட்டில் குறிப்பிடப்படுகிறது.