பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம்.! முக்கிய விவரங்கள் இதோ…
டெல்லி: 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைய உள்ளார்.
பிரதமர் மோடி இன்று (ஜூலை 8) முதல் 3 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு செல்ல உள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பெயரில் ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி அங்கு இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு பின்னர் ரஷ்யாவிற்கு இந்திய பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். ஆனால், இதற்கிடையில் வெவ்வேறு சந்திப்புகளில் புதின் – பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதே போல, 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் சமுக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், அடுத்த மூன்று நாட்களில், ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவில் இருக்க உள்ளேன். இந்த நாடுகளுடன் நட்புறவுகளை ஆழப்படுத்த இந்த இந்த பயணத்தை ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்நாட்டில் வாழும் இந்திய மக்களுடன் சந்திக்க உள்ளதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியும், புதினும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை மீண்டும் மதிப்பாய்வு செய். உள்ளனர். அவர்களின் சந்திப்பின் போது சமகால இரு நாட்டு பிரச்சனைகள், உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர்.
மாஸ்கோவில் பிரதமர் மோடி ரஷ்ய நாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், புதினுடனான தனிப்பட்ட சந்திப்பை நிகழ்த்த உள்ளார். பின்னர் ரஷ்ய அதிபர் புதின் வழங்கும் மதிய உணவு விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ரோசாட்டம் பெவிலியன் வளாகத்தில் உள்ள கண்காட்சி மையத்திற்கு வருகை புரியும் பிரதமர் மோடி, அங்கு இந்திய புலம்பெயர்ந்தோர் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் என ரஷ்ய பயணம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.