ஹெலிகாப்டர் விபத்து… சோனியா காந்திக்கு உதவியதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!
PM Modi: அரசியலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு உதயவியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல் ராகுல் காந்தியும் பிரதமர் மோடி அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தனது அரசியல் எதிரிகளான காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நெருக்கடியான நிலையில் இருக்கும்போது உதவியதை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
பிரபல ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி கூறியதாவது, நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, டாமன் நகரில் சோனியா காந்தி மற்றும் அகமது படேல் வந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அப்போது நான் அவர்களை உடனடியாக தொடர்புகொண்டு ஏர் ஆம்புலன்ஸை அனுப்புகிறேன் என்று அவர்களிடம் சொன்னேன்.
ஆனால் அனைவரும் நலமாக இருப்பதாகவும், எந்த வித அவசர நிலையும் தற்போது இல்லை எனவும் அகமது படேல் என்னிடம் கூறினார். இதேபோல் ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்திற்காக சோனியா காந்தி காசிக்கு சென்றபோது அவருக்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்டது.
அப்போது உடனடியாக சோனியா காந்தியை பார்க்கவும், என்ன என்பதை தெரிந்துகொள்ளவும் காசிக்கு எனது அதிகாரிகளை அனுப்புனேன். தேவைப்பட்டால் சோனியா காந்திய அழைத்து செல்ல தனி விமானத்தையும் அனுப்ப தயாராக இருந்தேன். இதுதான் நான், இது அரசியலுக்கு அப்பாற்பட்டது.
என்னைப் பொறுத்தவரை, யாருக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அதை தீர்க்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என பிரதமர் கூறியுள்ளார். இதுபோன்று, தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் சில சிக்கல் ஏற்பட்டதை கேள்விப்பட்டவுடன் அவரை தொடர்புகொண்டு என்ன நிலை என்று கேட்டறிந்தேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.