உலக சாதனை படைத்த குஜராத்.! வியந்து பாராட்டிய பிரதமர் மோடி.!
குஜராத்தில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை குஜராத்தில் 108 இடங்களில், 51 வெவ்வேறு குழுவினர்கள் மூலம் 4,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் சூரிய நமஸ்காரத்தை செய்தனர்.
ஆரோக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. பிரம்மாண்டமான மோதேரா, சூரியன் கோவிலில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள், யோகா ஆர்வலர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட பலர் உற்சாகமாக பங்கேற்றனர்.
பிரதமரின் திருச்சி பயணம்… நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்.. ரூ.19,850 கோடியில் திட்டங்கள்!
பிரமாண்ட சூரிய நமஸ்கார நிகழ்வின் மூலம் குஜராத்தின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வைத்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை எக்ஸ் சமுக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்ததோடு, இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக மாநிலத்தை பாராட்டினார். அனைத்து குடிமக்களும் சூரிய நமஸ்காரத்தை தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் எழுதுகையில், ‘ குஜராத், 2024ஆம் ஆண்டை ஒரு தனித்துவமிக்க சாதனையுடன் வரவேற்றுள்ளது. 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்கள். நாம் அனைவரும் அறிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை குறிக்கிறது. இந்த சாதனையில் மோதேரா சூரியன் கோயிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. யோகா மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தின் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாகும். சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாக மாற்றி கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சூரிய நமஸ்காரத்தின் நன்மைகள் மிக அதிகம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.