எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!
தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி பல்வேறு விஷயங்கள் குறித்து எலான் மஸ்க் உடன் பேசினேன் என பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் சந்தித்து பேசினார். அப்போது மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளை விரிவுவுபடுத்த பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்த சந்திப்பை அடுத்து பிரதமர் மோடி நேற்று எலான் மஸ்க் உடன் தொலைபேசியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் டிசியில் நடந்த சந்திப்பின் போது எலான் மஸ்க்கிடம் பேசியது மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றி தற்போது பேசினோம். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறைகளில் ஒத்துழைப்பதற்கான மகத்தான சாத்தியக்கூறுகளை நாங்கள் விவாதித்தோம். இந்த களங்களில் அமெரிக்காவுடனான நமது கூட்டாண்மைகளை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த தொலைபேசி உரையாடல் மூலம், இரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி ஆய்வு, மின்சார வாகனங்கள் (EVs), மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டது என்றும், எலான் மஸ்க்கின் நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் ஆகியவை இந்திய சந்தையில் நுழையும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைப்பது மற்றும் ஸ்டார்லிங்க் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Spoke to @elonmusk and talked about various issues, including the topics we covered during our meeting in Washington DC earlier this year. We discussed the immense potential for collaboration in the areas of technology and innovation. India remains committed to advancing our…
— Narendra Modi (@narendramodi) April 18, 2025