கரண்ட் பில் ஜீரோ.. பெட்ரோல் ஜீரோ… வீடுதோறும் சோலார்… பிரதமர் மோடியின் இலக்குகள்.!
PM Modi : வீடுதோறும் சோலார் பேனல் நிறுவி, கரண்ட் பில் ஜீரோவாக கொண்டு வருவதே அடுத்த இலக்கு என பிரதமர் மோடி ஓர் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக இந்தியா முழுக்க நடைபெற்று வரும் சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பரப்புரைகளை பல்வேறு வகைகளில் மேற்கொண்டு வருகின்றனர். மேடை பேச்சு, ரோடு ஷோ, சமூக வலைத்தளங்கள், செய்தியாளர் சந்திப்பு, செய்தி நிறுவனங்களில் நேர்காணல்கள் என பல்வேறு விதமாக மக்களிடத்தில் தங்கள் எதிர்கால திட்டங்களை கூறி வருகின்றனர்.
பிரதமர் மோடியும் இந்தியா முழுக்க தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அவர் அண்மையில், Network18 எனும் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் , மின்சார கட்டணத்தை குறைப்பது, சோலார் பேனல்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்கால இலக்குகளை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகளை அமைப்பதே தனது இலக்கு என்றும், அதன் மூலம், வீட்டிற்கு தேவையான மின் கட்டணத்தை முழுவதும் குறைத்து ஜீரோவாக மாற்ற வேண்டும் என்றும், இதனால் நாட்டில் தயாரித்து உபரியாக இருக்கும் மின்சாரத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும், எரிசக்தி துறையில் நாடு தன்னிறைவு பெற வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் பிரதமர் மோடி நேர்காணலில் குறிப்பிட்டார்.
இதற்காக, பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் 10 மில்லியன் வீடுகளுக்கு (1 கோடி) 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்சார தகடு (சோலார் பேனல்) அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களையும் வீட்டிலேயே சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அதன் மூலம் 1000 முதல் 2000 ரூபாய் பெட்ரோல், போக்குவரத்து செலவுகள் மக்களுக்கு மிச்சமாகும். வரும் காலத்தில், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து, அரசு, பெட்ரோல் இறக்குமதிக்காக செலுத்தும் பில்லியன் டாலர்கள் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் தனது எதிர்கால இலக்குகள் குறித்து பல்வேறு தகவல்களை பிரதமர் மோடி நேர்காணலில் கூறினார்.