16வது பிரிக்ஸ் மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி!
இந்த ஆண்டு ரஷ்ய பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் இரண்டாவது பயணம் இதுவாகும்.
டெல்லி : 16வது ஆண்டு BRICS உச்சி மாநாடு இன்று ரஷ்யாவின் கசான் நகரில் தொடங்குகிறது. இந்த உச்சி மாநாடு இன்று முதல் அக்டோபர் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து உலகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர்.
இந்நிலையில், 2 நாட்கள் அரசு முறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். இப்பொது, ரஷ்யா பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் புதின் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் மற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ரஷ்ய பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் இரண்டாவது பயணம் இதுவாகும்.
PM @narendramodi emplanes for Kazan, Russia. He will attend the BRICS Summit and meet several world leaders. pic.twitter.com/yspFOD0ahr
— PMO India (@PMOIndia) October 22, 2024
குறிப்பாக, இந்த மாநாட்டின்போது, சீன அதிபர் ஜின்பிங்கை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடைசியாக 2022-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த ஜி20 மாநாட்டின் போது சந்தித்தனர்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் எல்லைப் பிரச்னை காரணமாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய அமைதியின்மையை தொடர்ந்து இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.