வரலாற்றில் இதுவே முதல் முறை.., பிரதமர் மோடியின் போலந்து, உக்ரைன் பயணம்.!
டெல்லி : பிரதமர் மோடி இன்றும் நாளையும் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு, அடுத்து வெள்ளியன்று உக்ரைன் நாட்டிற்கு செல்ல உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று போலந்து நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு அடுத்து வரும் வெள்ளியன்று உக்ரைன் நாட்டிற்க்கு செல்ல உள்ளார். முன்னதாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி தற்போது உக்ரைன் பயணம் மேற்கொண்டு இருப்பது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, உக்ரைன் அதிபரிடம் ஆலோசிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இன்று போலந்து நாட்டிற்கு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டார். போலந்து பயணம் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிடுகையில், ” வார்சாவுக்கு (போலந்து நகர்) புறப்படுகிறேன். போலந்துக்கு நாட்டிற்கு இந்த முறை மேற்கொள்ளும் பயணம் ஓர் சிறப்பு வாய்ந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான 70 வருட உறவுகளை சிறப்பிக்கும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது.
போலந்துடனான ஆழமான வேரூன்றிய நட்பை இந்தியா மதிக்கிறது. இது இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மைக்கான அர்ப்பணிப்பால் உறுதிப்படுத்தப்படுகிறது. போலந்தில், அந்நாட்டு ஜனாதிபதி அண்ட்ரேஜ் துதா (Andrzej Duda)மற்றும் பிரதமர் டொனால் டஸ்க் ஆகியோரை இன்று மாலை வார்சாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் சந்தித்து பேசவுள்ளேன். மேலும், அங்குள்ள இந்திய சமூகத்தினரிடமும் உரையாற்ற உள்ளேன்.” என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இந்தியா – போலந்து இடையே 70 ஆண்டுகால உறவு நீடிக்கிறது. 45 ஆண்டுகளுக்கு முன்னர் 1979இல் அப்போதைய இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் தான் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அதன் பிறகு போலந்து செல்லும் இந்திய பிரதமர், நரேந்திர மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பெயரில் வெள்ளியன்று உக்ரைன் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், ” உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் நான் உக்ரைனுக்குச் செல்கிறேன். உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த உக்ரைன் பயணத்தில், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், உக்ரைன் ரஷ்ய மோதலுக்கு ஓர் அமைதியான தீர்வு பற்றிய விவாதம் ஆகியவை குறித்து ஜெலென்ஸ்கையுடன் ஆலோசிக்க இருப்பதாகவும், நண்பர் நாட்டில் அமைதி விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம். ” என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.