பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி
இப்போது பயங்கரவாதிகளின் நிலத்தையும் அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரதமர் மோடி கடும் கோபத்துடன் பேசியுள்ளார்.

மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனையடுத்து, மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), ஜம்மு – காஷ்மீர் காவல்துறை, மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) இணைந்து பைசரன் பகுதியைச் சுற்றி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பயங்கரவாதிகள் பிர் பஞ்சால் மலைத்தொடரின் மேல் பகுதிகளுக்கு தப்பியதாக சந்தேகிக்கப்படுவதால் தீவிரமான சோதனையும் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், பீகாரின் மதுபானியில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஆதங்கத்துடன் பேசி கடும் கண்டனத்தையும் பதிவு செய்தார். இது குறித்து அவர் பேசுகையில் ” இந்த துக்கமான சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக நின்றுகொண்டு இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துவோம். ஓம் சாந்தி என கூறி அஞ்சலி செலுத்தினார்.
அதனைதொடர்ந்து ஆதங்கத்துடன் பேசிய அவர் ” ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நாட்டின் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொன்றனர்… இந்த சம்பவத்திற்குப் பிறகு நாடு சோகமாகவும் வேதனையாகவும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம்.
இந்தத் தாக்குதல் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது மட்டுமில்லை. நாட்டின் எதிரிகள் இந்தியாவின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர். எனவே, இன்று, பீகார் மண்ணில் இப்போது நின்றுகொண்டு இருக்கிறேன். இந்த நேரத்தில் முழு உலகிற்கும் ஒரு விஷயத்தை மாற்று உறுதியாக கூறுகிறேன். இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களைக் கையாளுபவர்களையும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் அடையாளம் கண்டு நிச்சயமாக பயங்கரமான தண்டனையை கொடுக்கும்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்களுக்கும், அதைத் திட்டமிட்டவர்களுக்கும், அவர்கள் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரிய தண்டனை கிடைக்கும். தண்டனை கிடைப்பதை பார்த்துவிட்டு இனிமேல் இது போன்று செய்யவே பயங்கரவாதிகள் யோசிப்பார்கள். பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது. இப்போது பயங்கரவாதிகளின் நிலத்தையும் அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த உறுதிப்பாட்டில் முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் உள்ளனர். எங்களுடன் நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். 140 கோடி இந்தியர்களின் மன உறுதி பயங்கரவாதத்தால் ஒருபோதும் உடைக்கப்படாது.” எனவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.