6 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள்.. பிரதர் மோடி தகவல்.!
சென்னை: கடந்த 6,7 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என பிரதர் மோடி பேட்டியளித்துள்ளார்.
மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தை எட்டி வருவதால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும் முன்பை விட தற்போது தீவிரமடைந்து உள்ளது. பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் எதிர்கட்சிகள் மீதான விமர்சனங்கள் குறித்தும் பேசுவது போல , தனியார் ஊடகங்களிலும் பேட்டிகள் வாயிலாக தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி.
தனியார் செய்தி நிறுவனமான NDTV செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். அவர் கூறுகையில், தனது அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பல புதிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இளைஞர்களிடையே ஏற்படும் மாற்றங்களை எதிர்கட்சிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. 2014-க்கு முன் நூற்றுக்கணக்கில் தான் ஸ்டார்ட்அப் (சிறுகுறு தொழில் நிறுவனங்கள்) மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது 1.25 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டார்ட்அப்பிலும் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த சிறுகுறு நிறுவனங்கள் மூலம் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிகம் நடைபெறுகிறது. இதில் பயனடைந்தவர்கள் பெரும்பாலும் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அதே போல விளையாட்டு துறையிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் துறையில் இந்தியா முன்னணியில் இருக்கும். 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருப்பார் என்றும் பிரதமர் மோடி கூறினார். அடுத்ததாக வளர்ந்து வரும் மற்றொரு துறை, பொழுதுபோக்குத்துறை. இதில், இந்திய படைப்பாளிகள் உலக சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவார்கள் என்று உறுதியாக நம்புவதாக பிரதமர் மோடி கூறினார்.
வேளாண்துறையிலும் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. விமானத் துறையில்,முன்னர் 70 விமான நிலையங்கள் இருந்தன, இப்போது 150 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டில் மொத்தம் 600-700 விமானங்கள் உள்ளன. மேலும் 1,000 புதிய விமானங்கள் இந்தியாவில் பறக்க உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விமானத்துறை எப்படி இருந்தது என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த 6,7 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் பல்வேறு துறைகளில் 6 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக PLFS தரவு கூறுகிறது என்று பிரதமர் மோடி பேட்டியில் குறிப்பிட்டு பேசினார்.