10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்., 12 கோடி கழிவறைகள்., பிரதமர் மோடி பெருமிதம்!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள், 12 கோடி கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 31-ல் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அதனை அடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்தார். அடுத்ததாக திமுக, காங்கிரஸ் என ஒவ்வொரு கட்சி சார்பாகவும் அக்கட்சி தலைவர்கள் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து வந்தனர்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அவர் கூறுகையில், ” குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பதிலளிப்பதற்கு 14-வது முறையாக நாட்டு மக்கள் எனக்கு வாய்ப்பளித்துள்ளதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எனவே, மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் 2025-ல் இருக்கிறோம். ஒரு வகையில் 21-ம் நூற்றாண்டின் 25% கடந்துவிட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு 20ஆம் நூற்றாண்டிலும், 21ஆம் நூற்றாண்டின் முதல் 25 வருடங்களிலும் என்ன நடந்தது என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஆனால், குடியரசுத் தலைவரின் உரையை நாம் நுணுக்கமாகப் படித்தால், வரும் 25 ஆண்டுகள் மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பது குறித்து அவர் பேசினார் என்பது தெளிவாகிறது. அவரது பேச்சு வளர்ந்த பாரதத்தின் உறுதியை வலுப்படுத்துகிறது, புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் சாதாரண மக்களையும் வளர்ச்சியை நோக்கி ஊக்குவிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு தான் புதிய வீட்டின் அருமை புரிகிறது. முன்னர் கழிவறை வசதி இல்லாததால் கடந்த காலங்களில் பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த வசதிகள் எல்லாம் உள்ளவர்களால் கஷ்டப்படுபவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாது. நமது ஆட்சியில் 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகளை கொடுத்துள்ளோம். சிலர் ஏழை மக்களின் வீடுகளுக்கு சென்று புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மாளிகையில் சொகுசாக வாழ்பவர்களுக்கு ஏழை மக்களை பற்றி பேசுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. ” என்று பிரதமர் மோடி பேசினார்.