“காங்கிரஸ் கட்சியின் ATM-கள் என்ன தெரியுமா.?” பிரதமர் மோடி கடும் தாக்கு.!
காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அக்கட்சியின் ATMஆக செயல்பட்டு வருகின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும் களம் காண்கின்றனர்.
இந்த தேர்தலுக்காக பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பேசிய தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் பிரதமர் மோடி, இன்று அகோலா பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதில், ” காங்கிரஸ் எந்த மாநிலத்தில் ஆட்சி அமைத்தாலும், அந்த மாநிலம் காங்கிரஸ் குடும்பத்தின் ATM மிஷின் (பணம் எடுக்கும் இயந்திரம்) போல மாறிவிடுகிறது. தற்போதைய சூழலில் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் காங்கிரஸின் ATMகளாக செயல்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரா தேர்தலை குறி வைத்து, கர்நாடகாவில் மது விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.700 கோடியை வசூல் செய்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். இந்த தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவர்கள் கொள்ளையடிப்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். ” என்று பிரதமர் மோடி பேசினார்.
மேலும், ” நீங்கள் மற்ற கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்திக்கும் போது, இன்னும் சில குடும்பங்கள் தற்காலிக வீடு அல்லது குடிசையில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டால், அவர்களுடைய பெயரையும் முகவரியையும் எனக்கு அனுப்புங்கள். எனது சார்பாக அவர்களுக்கு நிரந்தர வீட்டை நீங்கள் உறுதி செய்யுங்கள். நான் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.” என்றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.