நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை..!
நாட்டில் கொரோனா நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்த உயர்மட்ட ஆய்வு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
பிரதமர் அலுவலகத்தின் கூற்றுப்படி, தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி இயக்கம் தொடர்பான இந்தியாவின் தற்போதைய நிலைமையை சரி செய்ய இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதிலிருந்து 37,681 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் 260 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில், கேரளாவில் 26,200 புதிய வழக்குகளும் 114 இறப்புகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் மூலமாக இதுவரை 72.37 கோடி தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு இன்றுவரை செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.