இந்தியாவில் ஒலிம்பிக் எப்போது? செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு.!
டெல்லி : இந்தியாவில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் பிரதமர் மோடி தனது உரையில், ” 75,000 புதிய மருத்துவ படிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் செக்யூலர் சிபில் கோட், பங்களாதேஷ் இந்துக்கள் பாதுகாப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியின் முதல் சுதந்திர தின உரை இதுவாகும். சமீபத்தில், பாரிஸ் ஒலிம்பிக்கில் நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய விளையாட்டு வீரர்களை பிரதமர் மோடி தனது உரையில் பாராட்டினார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது உரையில், “ இன்று, ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப் படுத்திய இளைஞர்களும் நம்முடன் இருக்கிறார்கள். 140 கோடி நாட்டு மக்கள் சார்பாக, நமது அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நான் வாழ்த்துகிறேன். அடுத்த சில நாட்களில், பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்திய அணியினர் பாரிஸ் புறப்பட உள்ளனர்.
எங்கள் அனைத்து பாராலிம்பியன்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி20 மாநாட்டை நடத்தியதன் மூலம் பெரிய நிகழ்வுகளை இந்தியாவால் நடத்த முடியும் என்று நிரூபித்துள்ளதாகவும், இந்தியாவின் அடுத்த கனவு 2036 ஒலிம்பிக்ஸ் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதவாது, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு என்றும், அதற்கான ஏற்பாடுகளை தனது அரசாங்கம் செய்து வருவதாகவும் “அவர் கூறினார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஆறு பதக்கங்களை வென்றதுடன் 64வது இடத்தையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.