மணிப்பூர் நீர் விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்!

மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு இன்று காலை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மத்திய அரசு, மணிப்பூர் மாநிலத்தில் 1,185 குடியிருப்புகளில் உள்ள 1,42,749 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை அளிப்பதற்காக நிதியுதவி அளித்துள்ளது. மேலும், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறையிலிருந்து கூடுதல் நிதியைப் பெற்று, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பினை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு இன்று காலை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் மணிப்பூர் மாநில ஆளுநர் நச்மா எப்துல்லா, முதல்வர் பிரேன் சிங் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்கு அடிக்கல் நாட்டியபின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்பொழுது, வடகிழக்கு இந்தியா முன்னேற மற்றும் செழிப்படைய பிற பகுதிகளுடனான இணைப்பு மிக அவசியமெனவும், பாதுகாப்பான மற்றும் தன்னிறைவான இந்தியா உருவாகவும் இது அவசியம் என தெரிவித்தார்.