"டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது" – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகப்படியாக கொரோனா பாதித்த மாநிலங்களில் ஒன்றான டெல்லியில் இதுவரை கொரோனா வைரசால் 2,376 பேர் பாதிக்கப்பட்டு, 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது என்றும் கொரோனா பாதித்த 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது எனவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தடுப்புக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு, ரத்தத்தில் இருந்து அவற்றை பிரித்தெடுத்து கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளது. டெல்லி, கேரளா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. அதன்படி டெல்லியில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.