எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!
மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவை அடுத்து இன்றும், நாளையும் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 91.
மறைவு :
மாரடைப்பு உள்ளிட்ட உடலநலக்கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வாசுதேவன் நாயர் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று (டிசம்பர் 25) சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி அளவில் உயிரிழந்தார்.
விருதுகள் :
இவர் மத்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருது பெற்றுள்ளார். 7 முறை தேசிய திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். பல்வேறு மலையாள இலக்கிய நாவல்களையும் எழுதி இவர் புகழ் பெற்றுள்ளார். எழுத்தச்சன் விருது, கேந்திர சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது என கேரளாவில் பல்வேறு முக்கிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். அந்த அளவுக்கு மலையாள எழுத்துலகில் ஆளுமை மிக்க மனிதராக எம்.டி.வாசுதேவன் நாயர் இருந்துள்ளார்.
முதலமைச்சர் இரங்கல் :
எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு குறித்து, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவிடுகையில், மலையாள இலக்கியத்தை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்த எம்.டி.வாசுதேவன் நாயரை நாம் இழந்துள்ளோம். இது கேரளாவுக்கு மட்டுமல்ல, மலையாள இலக்கிய உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என பதிவிட்டு உள்ளார்.
மேலும், சிறுகதை, நாவல், திரைக்கதை எழுதுதல், திரைப்பட இயக்கம், பத்திரிக்கை துறை, கேரளா கலாச்சார தலைமை என பல துறைகளில் இவர் சிறந்து விளங்கியதாகவும், ஒரு தலை சிறந்த ஆளுமை என்றும் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.
துக்கம் அனுசரிப்பு :
எம்.டி.வாசுதேவன் நாயரின் மறைவை எடுத்து, இன்றும் நாளையும் (டிசம்பர் 26, 27) 2 நாள் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இன்றும் நாளையும் அமைச்சரவை கூட்டம் உட்பட எந்த அரசு நிகழ்வுகளும் நடைபெறாது என குறிப்பிடப்பட்டுள்ளது.