காலில் துண்டு சீட்டுடன் பாதுகாப்பு படை வீரர் தோளில் அமர்ந்த புறா….! வழக்குப்பதிவு செய்யுமாறு வீரர்கள் புகார்…!
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து வந்த ஒரு புறா, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் தோள் மீது அமர்ந்துள்ளது. இதுகுறித்து, பாதுகாப்பு படையினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் அருகே, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரோராவாலா போஸ்ட் அருகே எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து ஒரு புறா வந்துள்ளது. அந்த புறா வந்து எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் தோள் மீது அமர்ந்தது. அப்போது அந்த புறாவை தூக்கிய பாதுகாப்பு படை வீரர், அதன் காலில் ஒரு துண்டுச்சீட்டு இருந்ததை பார்த்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகம் அடைந்த அவர் அந்த சீட்டினை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் ஒரு போன் நம்பர் இருந்துள்ளது. இதுகுறித்து, எல்லைப் பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். அந்த புறாவை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தோடு புகாரில் இதுகுறித்து சட்டபூர்வமாக விசாரித்து புறா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் சீனியர் காவல்துறை கண்காணிப்பாளர் துருவ் இது குறித்து கூறுகையில், புறா ஒரு பறவை. அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியுமா? என்பது தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பாக சாத்திய அறிக்கையை சட்ட துறையினரிடம் கேட்டுள்ளோம். புறா காலில் இருந்த துண்டு சீட்டில் எழுதப்பட்டிருந்த மொபைலின் குறித்தும் விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.