சிறுவர்களிடம் 2,3-ம் கட்ட பரிசோதனை – சீரம் நிறுவனத்திற்கு அனுமதி மறுப்பு!
சீரம் நிறுவனம் சிறுவர்களிடம் 2,3 ஆம் கட்ட தடுப்பூசி பரிசோதனை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரஜெனகாவின் கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மற்ற பிற நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி மக்களால் அதிக அளவில் நம்பி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த தடுப்பூசியை 2-17 வயது சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்கான முதற்கட்ட பரிசோதனை நடந்தது. தற்போதும் அதே வயதுடைய சிறுவர்களுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவனத்திடம் சீரம் நிறுவனம் அனுமதி கேட்டு இருந்தது.
இது பற்றி ஆய்வு செய்வதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்ட நிலையில், இந்த குழுவின் பரிந்துரைப்படி சீரம் நிறுவனம் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை சிறுவர்களிடம் நடத்துவதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மறுத்துள்ளது. மேலும் பெரியவர்களிடம் நடத்தக்கூடிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை குறித்த முடிவுகள் வெளிவந்த பின்பு அதன் அடிப்படையில் சிறுவர்களுக்கு பரிசோதனை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.