கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! காரணம் என்ன?
பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை முறையே 29.84% மற்றும் 18.44% என அரசாங்கம் திருத்தியுள்ளது.
தற்பொழுது, இந்த பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 மற்றும் டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது. இதனால், பெங்களூருவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.84 ஆக இருந்து ரூ.102.84 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலையும் ரூ.3.02 அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.93 ல் இருந்து ரூ.88.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என அம்மாநில நிதித்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனை வரியை அம்மாநில அரசு திருத்தியமைத்துள்ளதால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிந்து ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.