சாலை விதிகளை மதிக்க மணிக்கணக்காக காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு வழங்கிய பெட்ரோல் பங்க் ஓனர்!
இந்தியா முழுவதும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தற்போது வண்டியின் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்து ஓட்டிவருகின்றனர். ஆவணங்கள் சரியில்லாத வாகன ஓட்டிகள் அதனை சரி செய்யும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வண்டி ஆர்.சி புக், இன்சூரன்ஸ் சேர்த்து வாகன மாசு கட்டுப்பாட்டு சான்றும் பெற்றுக்கொள்ள வேண்டும் என சில மாநிலங்களில் கூறப்பட்டதால் அதனையும் வாகன ஓட்டிகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத்தில் உள்ள வாதோரா பகுதியில் அரவிந்த் படேல் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகள் மாசு கட்டுப்பாட்டு சான்று வாங்க காலை 6 மணி முதலே வரிசையில் காத்திருந்தனர். இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஓனர் வாடிக்கையாளர்களின் பசியாற்ற முடிவெடுத்தார்.
இதன் படி சாப்பாட்டை தவிர்த்து வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த வழக்கம் கொண்டுவரப்பட்டது. இதுவரை 13 ஆயிரம் பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது என பங்க் உரிமையாளர் தெரிவித்தார்.