சல்மான் குர்ஷித் புத்தகத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி..!
சல்மான் குர்ஷித் புத்தகத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தின் புதிய புத்தகமான “சன்ரைஸ் ஓவர் அயோத்யா” தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த புத்தகத்திற்கு தடை கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டால், நாங்கள் என்ன செய்ய முடியும்.
இந்த புத்தகத்தில், சல்மான் குர்ஷித் இந்துத்துவாவை பயங்கரவாத அமைப்புகளான ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற அடிப்படைவாத குழுக்களுடன் ஒப்பிட்டுள்ளார். இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, சல்மான் குர்ஷித்தின் “சன்ரைஸ் ஓவர் அயோத்யா” புத்தகத்தை வெளியிடவும், விற்கவும் தடை விதிக்கக் கோரி டெல்லியின் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் புத்தகத்தில் ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இந்துத்துவாவை ஒப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டின் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் எழுதிய புத்தகத்தை தடை கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் யாரையும் படிக்கச் சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டு படிக்காமல் இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து புத்தகத்திற்கு தடை கோரிய மனுவை நீதிபதி யஷ்வந்த் வர்மா தள்ளுபடி செய்தார்.