டியூசன் மாணவர்களை கவர விபரீத யோசனை.! குஜராத்தில் கைது செய்யப்பட்ட போலி இஸ்ரோ விஞ்ஞானி…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த டியூசன் ஆசிரியர் மிதுல் திரிவேதி என்பவர், தனது டியூசனுக்கு அதிகமான மாணவர்கள் பயில வேண்டும் என எண்ணி ஒரு விபரீத செயலை செய்துள்ளார். அதன் மூலம் தற்போது சிறையில் அடைபட்டுள்ளார்.
அண்மையில் நமது இஸ்ரோ விஞ்ஞானிகளால் நிலவின் தென் துருவத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திராயன்-3 விண்கலத்தை வடிவமைத்தத்தில் தானும் முக்கிய பங்காற்றியுள்ளேன் என கூறி விளம்பரப்படுத்தியுள்ளார் டியூசன் ஆசிரியர் மிதுல் திரிவேதி.
அதுமட்டுமில்லாமல், பிப்ரவரி 26, 2022 எனும் தேதியிட்ட இஸ்ரோ அளித்தது போன்ற போலி நியமனக் கடிதத்தை உருவாக்கியுள்ளார். மேலும், சில உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார் இந்த போலி விஞ்ஞானி. இதனால் சந்தேகமடைந்தோர் அளித்த புகாரின் பெயரில் சூரத் பகுதி காவல்துறையினர் விசரனை செய்துள்ளனர்.
காவல்துறையின் விசாரணையில் உண்மைகள் வெளியே வர தற்போது டியூசன் ஆசிரியர் மிதுல் திரிவேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திரிவேதி M.Com பட்டம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பட்டத்தை இன்னும் காவல்துறையினர் சரிபார்க்கவில்லை. தற்போது திரிவேதி மீது IPC 465, 468, 471 மற்றும் 419 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.